கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ விசாரணைக்கு வந்த நகர காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ். படம்: க.ராதாகிருஷ்ணன்
கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சிபிஐ விசாரணை தொடங்கியது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கடந்த அக்டோபர் முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் சாலையின் அமைப்பு குறித்து நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டதுடன், தொடர்ந்து அங்கு கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், நெடுஞ்சாலை, மின்வாரிய அலுவலர்கள், தவெக நிர்வாகிகள், ஆட்சியர், ஐ.ஜி. எஸ்.பி. ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்யின் பிரச்சார வாகனம் கொண்டு வரப்பட்டு, அளவீடு செய்யப்பட்டு, அதன் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையில், தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தவெக நிர்வாகிகளும், தற்போதைய அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடிஆர்.நிர்மல்குமார் மற்றும் ஆட்சியர், ஏடிஜிபி, எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இந்நிலையில், சிபிஐ இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் மற்றொரு அலுவலர் என இருவர் மட்டுமே கடந்த 3 மாதங்களாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தனர். 3 மாதங்களுக்குப் பிறகு, சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் காவல் ஆய்வாளர் சையது அலி, உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட 10 போலீஸார் நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விசாரணை நடத்தினார்.