சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்துக்கு வந்த குடும்பத்தினர். | படம்: நா.தங்கரத்தினம் |

 
தமிழகம்

சாத்தான்குளம் வழக்கில் ஏப். 6-ல் தண்டனை: தூக்கு தண்டனை வழங்க சிபிஐ இறுதி வாதம்

நீதிபதி முன்பு ஜெயராஜ் மனைவி கண்ணீர்

கி.மகாராஜன்

மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​ குளத்​தில் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீ​ஸாருக்​கும் தூக்​குத் தண்​டனை வழங்க வேண்​டும் என இறுதி வாதத்​தில் சிபிஐ கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

ஜெய​ராஜ் மனைவி நீதிபதி முன்பு ஆஜராகி 9 பேருக்​கும் அதி​க பட்ச தண்​டனை வழங்க வேண்​டும் என கண்​ணீர் மல்க கேட்​டுக்​ கொண்​டார். இதையடுத்து தண்​டனை ஏப். 6-ல் அறிவிக்​கப்படும் என நீதிபதி தள்​ளி​வைத்​தார்.

சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராஜ். இவரது மகன் பென்​னிக்​ஸ். இவர்​கள் சாத்​தான் குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர்.

கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்​குக் கட்​டுப்​பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்​திருந்​த​தாக ஜெய​ராஜ், பென்​னிக்ஸ் இரு​வரை​யும் சாத்​தான்​குளம் போலீ​ஸார் விசா​ரணைக்​காக காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர்.

          

பின்​னர் காவல் நிலை​யத்​தில் வைத்து இரவு முழு​வதும் போலீ​ஸார் தாக்​கிய​தில் முதலில் பென்​னிக்​ஸ், அடுத்து ஜெய​ராஜ் உயி​ரிழந்​தனர். இதையடுத்து சிபிஐ கொலை வழக்​குப் பதிவு செய்து காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ், காவலர்​கள் முரு​கன், சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லத்​துரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலு​முத்து ஆகியோர் கைது செய்​யப்​பட்டு மதுரை மத்​தி​யச் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்​டது. விசா​ரணை முடிந்து 9 பேரும் குற்​ற​வாளி​கள் என்​றும் தண்​டனை விவரம் பின்​னர் அறிவிக்​கப்​படும் என்​றும் நீதிபதி முத்​துக்​குமரன் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி முத்​துக்​குமரன் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. ஸ்ரீதர் உள்​ளிட்ட 9 பேரை​யும் போலீ​ஸார் ஆஜர்​படுத்​தினர்.

பின்​னர் சிபிஐ வழக்​கறிஞர் விஜயன் வாதிடு​கை​யில், குற்​றம் நிரூபிக்​கப்​பட்​ட​தால் குற்​ற​வாளி​களுக்கு அதி​கபட்ச தண்​டனை வழங்க வேண்​டும். தூக்​குத் தண்​டனை, இரட்டை ஆயுள் போன்ற அதி​கபட்ச தண்​டனை வழங்க வேண்​டும். அரி​தினும் அரி​தான காவல் கொடூர மரண வழக்​கு​களில் தூக்​குத் தண்​டனை வழங்​கலாம் என உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

போலீ​ஸாரின் செயல் மனித உரிமைக்கு எதி​ரானது. ஆயுதங்​களால் கொடூர​மாக தாக்கி இரு​வரை​யும் கொலை செய்​துள்​ளனர். காவல் மரணங்​களில் நேரடிச் சாட்​சிகள் இருக்க மாட்​டார்​கள். இந்த வழக்​கில் 3 பேர் நேரடிச் சாட்​சிகளாக உள்​ளனர். எனவே 9 பேருக்​கும் அதி​கபட்ச தண்​டனை​யாக தூக்​குத் தண்​டனை அல்​லது இறக்​கும் வரை சிறை​யில் இருக்​கும் தண்​டனை வழங்க வேண்​டும், என்​றார்.

குற்​ற​வாளி​கள் என அறிவிக்​கப்​பட்​டோரின் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​களின் வாதம்: குற்​றம்​சாட்​டப்​பட்ட 9 பேரும் ஐந்​தரை ஆண்​டு​களுக்கு மேலாகச் சிறை​யில் உள்​ளனர்.

குற்ற வழக்​கில் ஒரு​வருக்கு தண்​டனை வழங்​கும்​போது அவரின் குடும்​பச் சூழல், உடல் நிலை, வயது, சிறை​யில் இருந்​தது ஆகிய​வற்றை கவனத்​தில் கொண்டு முடி​வெடுக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

ஜெய​ராஜை விசா​ரணைக்​காக காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றது வரை ஒன்​றும் இல்லை. பென்​னிக்ஸ் காவல் நிலை​யம் சென்ற பிறகு​தான் அனைத்​தும் நடந்​துள்​ளது. பென்​னிக்ஸ் போலீ​ஸாரை கோபப்​படுத்​தும் வகை​யில் நடந்​துள்​ளார். இதனால் போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். போலீ​ஸார் உள்​நோக்​கத்​துடன் செயல்​பட​வில்​லை.

உண்​மை​யில் உள்​நோக்​கம் இருந்​திருந்​தால் இரு​வரின் உடலில் உள்ள முக்​கியப் பாகங்​களில் தாக்​கி​யிருப்​பார்​கள். போலீ​ஸாரின் செயல்​பாடு மரணம் விளைவிக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில் இல்​லை. அரி​தினும், அரி​தான வழக்​கு​களில் தூக்கு தண்​டனை வழங்​கலாம் என உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

அதே நேரம் ஏன் தூக்​குத் தண்​டனை வழங்க வேண்​டும்? அது அவசி​ய​மா? என்​ப​தைப் பரிசீலிக்க வேண்​டும். ஒரு​வர் சமு​தா​யத்​தில் வாழத் தகு​தி​யற்​றவர், அவரை இனிமேல் திருத்த முடி​யாது என்ற முடிவுக்கு வரும்​போது தூக்​குத் தண்​டனை வழங்​கு​வது குறித்து பரிசீலிக்​கலாம். இந்த மரணங்​கள் உள்​நோக்​கம் இல்​லாமல் நிகழ்ந்​தது. குற்​றம்​சாட்​டப்​பட்​டோர் திருந்தி வாழும் வகை​யில் தண்​டனை வழங்க வேண்​டும், என்​றனர்.

அதிகபட்ச தண்டனை தேவை

தண்​டனை குறித்து ஜெய​ராஜின் மனைவி செல்​வ​ராணி​யிடம் நீதிபதி கருத்து கேட்​டார். அதற்கு அவர் கண்​ணீர் விட்​டபடியே, என் கணவரை போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றனர். விசா​ரித்து விட்டு அனுப்​பி​விடு​வார்​கள் என நினைத்​தேன்.

நான் காவல் நிலை​யம் சென்று போலீ​ஸாரின் காலில் விழுந்து இரு​வரை​யும் விட்​டு​விடு​மாறு கெஞ்​சினேன். அதன் பிறகும் இரு​வரை​யும் விட​வில்​லை. இரவு முழு​வதும் இரு​வரை​யும் கொடூர​மாக தாக்​கிக் கொலை செய்​துள்​ளனர்.

அனை​வருக்​கும் அதி​கபட்ச தண்​டனை வழங்க வேண்​டும், என்​றார். இறுதி வாதம் முடிந்த நிலை​யில் ஏப்​.6-ல் தண்​டனை விவரம் அறிவிக்​கப்​படும் எனத் தெரி​வித்து விசா​ரணையை நீதிபதி தள்​ளி​வைத்​​தார்​.

SCROLL FOR NEXT