ஆம்ஸ்ட்ராங் | கோப்புப் படம்
சென்னை: பகுஜன் சமாஜ் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து தனது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தையே உலுக்கியது. இக்கொலை வழக்கை முதலில் விசாரித்த சென்னை செம்பியம் காவல்துறை, 30 பேர் மீது 7,411 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. மேலும், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா ஆகிய இருவர் காவல்துறையின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இருப்பினும், காவல் துறையின் விசாரணையில் திருப்தி அடையாத ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், “கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல் துறையின் புலனாய்வில் இருந்த பல்வேறு குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியதுடன், தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை ரத்து செய்து வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தற்போதைய அரசு அண்மையில் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால் சிபிஐ விசாரணைக்கான முட்டுகட்டைகள் முழுமையாக விலகின.
இதனைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் செம்பியம் காவல் துறை, சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதனடிப்படையில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிஐ முறைப்படி வழக்குப் பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.