

புதுச்சேரி: சுற்றுலாப் பயணிகளை கவர புதுச்சேரியில் டிராம் சேவை தொடங்க முதல் கட்ட ஆய்வு நடத்தி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும் என்றனர்.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அனைத்து வழித்தடத்திலும் அரசு மின்சார பஸ்களை இயக்க தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயக்கப்படுவது போல டிராம் சேவையை தொடங்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது.
மணக்குள விநாயகர் கோவில் அருகே டிராம் வண்டி இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை, நகராட்சி, பிஆர்டிசி அதிகாரிகள் முதல்கட்ட ஆய்வு நடத்தினர்.
இதுபற்றி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "டிராம் வண்டி சாலைகளின் நடுவே தண்டவாளங்களில் இயக்கப்படும். மற்ற வாகனங்களுடன் குறைந்த வேகத்தில் பயணிகளை அழைத்து செல்லும். புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பார்க் விடுதியில் இருந்து கடற்கரை சாலை, பிரெஞ்சு துாதரகம், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை ஒயிட் டவுன் பகுதியில் இந்த டிராம் வண்டியை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
புதுவை சாலை போக்குவரத்து கழகம், சுற்றுலாத்துறை இணைந்து இந்த டிராம் வண்டி திட்த்தை செயல்படுத்த உள்ளது. என்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் பேட்டரி டிராம் வண்டி இயக்கப்படும். இதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும். அத்துடன் ஒயிட் டவுன் பகுதியில் முக்கிய இடங்களுக்கு டிராம் செல்ல இயலுமா என்பதையும், தாவரவியல் பூங்காவில் இருந்து டிராமை இயக்க முடியுமா என்றும் ஆலோசித்தும் வருகிறோம்" என்றனர்.