சென்னை: டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜன.19-ம் தேதி டெல்லியில் மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதன்படி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று முன்தினம் டெல்லியில் அதிகாரிகள் முன்னிலையில் அவர் ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்றும் (ஜன.13-ம் தேதி) ஆஜராகுமாறு விஜய்க்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, அடுத்த வாரம் ஆஜராவதாக விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற அதிகாரிகள், அடுத்தக்கட்ட விசாரணைக்கான தேதியை இன்னும் ஓரிரு நாட்களில் சம்மன் மூலம் தெரிவிப்பதா கூறினர்.
இந்நிலையில், டெல்லியில் தங்கியிருந்த விஜய், நேற்று பிற்பகல் 1 மணி அளவில் தனது நிர்வாகிகளுடன் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் சிடிஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜன.13-ம் தேதி (நேற்று) சிபிஐ விசாரணை தொடர வேண்டியிருந்தது.
இருப்பினும், பொங்கல் பண்டிகை, ‘ஜனநாயகன்’ திரைப்படப் பணிகள் மற்றும் கட்சி சார்ந்த முக்கிய ஆலோசனைகள் இருப்பதால், வேறொரு தேதியில் விசாரணையை வைத்துக்கொள்ள விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றனர். இதனால் அடுத்தவாரம் விஜய் மீண்டும் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கரூர் சம்பவத்தின்போது 607 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், அப்போதையை சட்டம் ஒழுங்கு- கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும் போது, 500 காவலர்கள் இருந்ததாகக் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண எண்ணிக்கையிலேயே இவ்வளவு முரண்பாடுகள் இருக்கும்போது, உண்மை நிலை எப்படி இருக்கும்.
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் தொடர் தவறுகளே கரூர் சம்பவத்துக்குக் காரணம். இதற்கான ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் சமர்ப்பித்துள்ளோம். குறிப்பாக, உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி, கையெழுத்து வாங்கியதாக பல புகார்கள் வந்ததுள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்துவதாக சிபிஐ அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படம் அமைதியான முறையில் வெளியாக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். படம் வெளியீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எங்கள் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம். எங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே விஜய் மீண்டும் வரும் 19-ம் தேதி சிபிஐ முன்பு ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. இதேபோல் தமிழக காவல் அதிகாரிகளும் ஆஜராக அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.