பழநி முருகன் கோயில்
மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கின் சிபிசிஐடி விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை நகலை சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களுக்கு வழங்க, அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் தனிநபர்கள் பெயருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் சேனாதிபதி, தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், பழனி திமுக நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுக்களில், பழநி கோயிலுக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுக்காக உண்மையை மறைத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உத்தரவு பெற்றுள்ளனர்.
வழக்கமான சார் பதிவாளர் விடுமுறையில் சென்ற நிலையில் பொறுப்பு சார் பதிவாளரை வைத்து பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த மோசடி தொடர்பாக மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர், வழக்கமான சார் பதிவாளர் என பலரிடம் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது.
இதனால் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதித்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதார்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், வீரா கதிரவன், ரவீந்திரன் வாதிட்டனர்.
அரசு தரப்பில், நில மோசடி வழக்கின் சிபிசிஐடி விசாரணை அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை அறிக்கை விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். இதனால் விசாரணை அறிக்கை நகல் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டாம் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஆக.12-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.