கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தலைக்காவிரி அடுத்துள்ள திரிவேணி சங்கமம் மூழ்கியுள்ளது. பாகமண்டலேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பெங்களூரு / தருமபுரி: கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, வீராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, மைசூருவில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 23,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆடிப் பெருக்கு நாளான ஆக.3-ம் தேதி (இன்று) மதியத்துக்குப் பிறகு, தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேரக்கூடும்’’ என்றனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: இதற்கிடையே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, பசவராஜ் பொம்மை, மஜததேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர், மத்திய அமைச்சர்கள் சோமண்ணா, ஷோபா கரந்தலாஜே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கர்நாடகா - தமிழகம் இடையே நீடிக்கும் காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரம், காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நிலவரம், அணைகளில் நீர் இருப்பு நிலவரம், கன்னட அமைப்புகளின் போராட்டம், மேகேதாட்டு திட்டம் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதாவது: காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீரை கர்நாடகா தர வேண்டும். தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியது. தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
கபினி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. அணையின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டுள்ளோம். எனவே கன்னட அமைப்பினர் இதை எதிர்த்து போராட வேண்டாம். ஆக.13-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம். காவிரி நீர் பிரச்சினைக்கு மேகேதாட்டு அணையே இறுதி தீர்வு.
அந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகாவை விட, தமிழகத்துக்கே அதிக நன்மை ஏற்படும். மேகேதாட்டு திட்ட அறிக்கையில் உள்ள சிறிய தவறுகளை சரி செய்து விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறோம். எனக்கு இரு மாநில விவசாய நலனும் முக்கியம். நாமெல்லாம் ஒன்றுபட்ட இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.
முதல்வர் விஜய்க்கு பாராட்டு: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியல் ரீதியாக எங்களுக்கிடையே வேறுபாடு இருந்தாலும், அவர் பெங்களூரு வருவதாக கூறியதை மனதார பாராட்டுகிறேன். சுமுகமான சூழலில் அவரை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்பதாலே அந்த சந்திப்பை தள்ளிவைக்குமாறு கேட்டேன். எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் முழக்கமிடுவதை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
‘இரு மாநிலங்களும் பேசித் தீர்க்க வேண்டும்’ - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் சிவகுமார், ‘‘காவிரி நீர் பிரச்சினையை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டும். கடவுள் ஆசியால், ஜூலை 31 முதல் காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளுக்கும் 68,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 4 அணைகளிலும் 57 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவை, கர்நாடக விவசாயிகளின் பாசன தேவை ஆகியவற்றுக்கு இந்த நீர் பயன்படுத்தப்படும்’’ என்றார்.