புதுடெல்லி/பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
பின்னர் தமிழக அரசின் சார்பில், “காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி வறட்சி காலத்தில் செப்டம்பர் மாதத்தில் தமிழகத்துக்கு 7.8 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கர்நாடக அரசு, அம்மாநிலத்தில் பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே நீரை திறக்க முடியாத நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், “தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா காவிரியில் திறந்துவிட வேண்டும். இதனை செப்டம்பர் 9-ம் தேதி(இன்று) முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.