தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் சென்னை சிட்லப்பாக்கம் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. படம்:எம்.முத்துகணேஷ்

 
தமிழகம்

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. அன்​றில் இருந்தே தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்து விட்​டன. இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர் மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

          

இந்​நிலை​யில், தேர்​தல் தொடர்​பாக எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்து தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் தேர்​தல் செல​வினங்​கள் உன்​னிப்​பாக கண்​காணிக்​கப்​பட்​டு, பதிவு செய்​யப்​படு​கின்​றன. ஒரு வேட்​பாளர் அதி​கபட்​சம் ரூ.40 லட்​சம் வரை மட்​டுமே தேர்​தல் சம்​பந்​த​மான பணி​களுக்​காகச் செலவு செய்ய முடி​யும்.

தேர்​தல் நடை​முறை​களை தீவிர​மாகக் கண்​காணிக்க 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் பறக்​கும் படைகள் மற்​றும் நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் மட்​டுமல்​லாமல் 25 துறை சார்ந்த கண்​காணிப்​புக் குழுக்​களும் இடம்​பெற்​றுள்​ளன. இதில் வரு​மான வரித் துறை, அமலாக்​கத் துறை, சுங்​கத் துறை உள்​ளிட்ட துறை​களும் அடங்​கும்.

தற்​போது 234 தொகு​தி​களி​லும், தொகு​திக்கு தலா 9 பறக்​கும் படைகள், 9 நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற விகிதத்​தில், தமிழகம் முழு​வதும் 2,160 பறக்​கும் படைகள், 2,160 நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இக்​கண்​காணிப்​புக் குழுக்​கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம் மற்​றும் பரிசுப் பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்டு விசா​ரணை நிலை​யில் உள்​ளன.

பொது​மக்​கள் புகார் தெரி​விப்​ப​தற்கு வசதி​யாக, ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் மாவட்ட தேர்​தல் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் அளிக்​கும் புகார்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. தமிழகம் முழு​வதும் நேற்று காலை வரை 1.68 லட்​சம் சுவர் விளம்​பரங்​கள் நீக்​கப்​பட்டு 61 இனங்​களில் குற்​ற​வியல் நடவடிக்கை தொடர்​வதற்​காக முதல் தகவல் அறிக்கை பதி​யப்​பட்டு தொடர் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

தேர்​தல் நடத்தை விதி​களின்​படி மறைந்த தலை​வர்​களின் சிலைகள் மறைக்​கப்பட வேண்​டிய​தில்லை என்​றும், தற்​போது அரசி​யல் களத்​தில் உள்ள தலை​வர்​களின் புகைப்​படங்​கள் அரசு பொது இடங்​களிலோ, அரசு கட்​டிடங்​களிலோ வைக்​கப்​பட்டு இருந்​தால் அவை மறைக்​கப்பட வேண்​டும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள், அரசி​யல் கட்​சி​யினர், வேட்​பாளர்​கள் மற்​றும் வியா​பாரி​கள் ரொக்​கம் எடுத்து செல்​லும் பொழுது அவை எப்​படி பெறப்​பட்​டது, எதற்​காக எடுத்து செல்​லப்​படு​கிறது என்​ப​தற்​கான ஆவணங்​கள் அல்​லது அதற்​கான காரணங்​களை எழுத்து மூலம் சமர்ப்​பித்​தால், அத்​தொகை பறி​முதல் செய்​யப்​ப​டாது. உடனடி​யாக உரிய​வரிடம் திரும்ப வழங்​கப்​படும். இது குறித்து முறை​யீடு ஏதும் இருப்​பின் மாவட்ட குறைதீர் குழு​விடம் முறை​யிடலாம். இவ்​வாறு அர்ச்​சனா பட்​நாயக் கூறி​னார்.

மேலும், புகார்​கள் தொடர்​பாக அவர் கூறும்​போது, ‘‘கள்​ளக்​ குறிச்சி மாவட்ட ஆட்​சி​யரை மாற்​று​வது தொடர்​பான புகார் தேர்​தல் தொடர்​பானது இல்லை என்​ப​தால் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. பல்​லடத்​தில் மருத்​து​வச் செல​வுக்​காக கொண்டு சென்ற பணம் பறி​முதல் செய்​யப்​பட்ட விவ​காரத்​தில்​ வி​சா​ரணை நடத்​தப்​படும்​’’ என்​றார்​.

327 பார்வையாளர்கள் நியமனம்: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்கள், 188 காவல் துறை பார்வையாளர்கள், 366 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் துறை பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்கள், 4 காவல் துறை பார்வையாளர்கள், 17 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 18-க்குள் (இன்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதோடு, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்களில் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT