சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக்கூறி திமுக சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து, உரிய பிரதிநிதித்துவம் வழங்கி அதன்பிறகு தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும், குற்றப் பின்னணி குறித்த தகவல்களை வேட்புமனுவில் தெரிவிக்க மறுத்தால் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவி்ட்டிருந்தது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கெனவே இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்து விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.