கள்ளக்குறிச்சி: மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருகம் போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் தகடி கிராமத்தில் காலை உணவு திட்டப் பணிக்கு பணியாளரை நியமிப்பது தொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் லலிதாவிடம் போனில் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் போனை துண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், மகளிர் திட்ட அலுவலர் கடந்த அக்.15-ம் தேதியே புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில், அக்.17-ம் தேதி புகார் அளித்துள்ளார். அங்கும் நடவடிக்கை எடுக்காததால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, மகளிர் திட்ட அலுவலர் லலிதா. ராமநாதபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த நவ.23-ம் தேதி அவரை பணியில் இருந்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் விடுவித்துள்ளார். இந்தச் சூழலில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருகம் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இந்திய நீதிச் சட்டத்தின் (BNS) பிரிவு 132, 351(2) மற்றும் தமிழ்நாடு பெண்களை துன்புறுத்துவதற்கு எதிரான சட்டப் பிரிவு என 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.