சென்னை: ஆலந்தூரில் உள்ள தனியார் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, நில அபகரிப்பில் ஈடுபட முயன்றதாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
காவல்துறையும் அந்த புகார்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு, செந்தில் பாலாஜி மீது குதிரை பேர வழக்கு, மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் மீது மோசடி புகார் என திமுகவினர் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீதும் நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் கடந்த 26-ம் தேதி முதலமைச்சர் தனிப்பிரிவில் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது உதவியாளர் ஜெய்சங்கர் மற்றும் தற்போது திருப்போரூர் தாசில்தாராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ஆகியோர் மீது நில மோசடி புகார் அளித்துள்ளார்.
அதில் சென்னை ஆலந்தூர் வடக்கு பரேடு சாலையில் தனக்கு சொந்தமாக 5,500 சதுர அடியில் நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2024 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உதவியாளர் ஜெய்சங்கர் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பணிமனை அமைப்பதற்காக குன்றத்தூரை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு ஆறு மாத காலம் குத்தகைக்கு கொடுத்துள்ளார்.
ஆனால் குத்தகை காலம் முடிந்தும் கடந்த இரு ஆண்டுகளாக இடத்தையும் திருப்பி கொடுக்காமல் வாடகையும் தராமல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் போலி அடையாள ஆவணங்களை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தபோது அவர் ஒரு வாரத்துக்குள் நிலத்தை தன்னிடம் கொடுத்து விடும்படியும் அதற்குண்டான பணத்தை தருவதாகவும் கூறினார்.
ஆனால் நான் நிலத்தை விற்க மாட்டேன் என கூறிவிட்டேன். எனவே தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜேஷ் சோமசுந்தரம் இது குறித்து பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் பரங்கிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.