திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் கடந்த 2025-ம் ஆண்டு திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டுத் திடலைச் சீரமைக்க முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்ட விரோதமாக ஏரி மண், கிராவல் மண்ணை கடத்தியதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், மலப்பாம்பாடி கிராமத்தில் 2025-ம் ஆண்டு திமுக இளைஞர் அணி மாநாடு நடத்துவதற்கு, மாநாட்டுத் திடலைச் சீரமைக்க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மலப்பம்பாடி ஏரியில் 8 ஏக்கர் பரப்பளவில் சுமார் 45,72,058 கன அடி மணல் மற்றும் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடியே 22 லட்சத்து 97 ஏழாயிரத்து 44 இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத மண் கடத்தல் குறித்து சமூக ஆர்வலர் அருள் ஆறுமுகம் உள்ளிட்டோர் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்த போதிலும், வருவாய்த் துறை, மாநகராட்சி மற்றும் சுரங்கம், புவியியல் துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
போலீஸார் சோதனை
இந்த ஏரி மண் கடத்தலில் திருவண்ணாமலை மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக இளைஞர் அணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை குடும்ப உறுப்பினர் மூலம் செயல்பட்டு வரும் ஏபியு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, செப்.25-ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
அதன் அடிப்படையில், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மற்றும் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனிநபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.