மதுரை: உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சந்தனக்கூடு விழா கொடியை கட்டியது தொடர்பாக அடையாளம் தெரியாத சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு உயர் நீமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முறையாக பதில் அளிக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்” என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
மேலும், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு கொடியேற்ற எப்படி அனுமதி வழங்கப்பட்டது? கொடியேற்றியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கோயில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கோயில் நிர்வாகம், கல்லத்தி மரத்தில் கொடி கட்டியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு திருப்பரங்குன்றம் கோயில் உள்துறைக் கண்காணிப்பாளர் ஜெ.சத்தியசீலன், போலீஸில் புகார் அளித்தார்.
அதில், “டிச.21-ம் தேதி இரவு கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி பிரவேசித்து, கோயில் மலை உச்சியில் உள்ள தல விருட்சமாகிய கல்லத்தி மரத்தில், தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கொடியை கட்டியது சட்டவிரோதம். இதில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அதன் பேரில், அடையாளம் தெரியாத சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.