

கோவை: தமிழக அமைச்சர்கள் சனாதனம் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகின்றனர் என்று பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கூறினார்.
பாஜக தொழில்முனைவோர் பிரிவு சார்பில் கோவையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியதாவது:
இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் 4-ம் இடத்தில் உள்ளது. இது ஒரே நாளில் நிகழ்ந்த மாற்றம் இல்லை. ஒவ்வொரு நாளும் முன்னேறி, தற்போது இந்நிலையை எட்டியுள்ளோம். தமிழகத்தில் கோவை மாநகரம் முன்னேறிய நகரமாக உள்ளது.
நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 12 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்தில் 6 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாக ஊழல் இல்லாத அரசாக பிரதமர் மோடியின் அரசு உள்ளது. ஆனால், திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஊழலில் ஊறி உள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வளர்ச்சியை மோடி முன்னெடுக்கிறார்.
கொங்கு மண்டலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. குழந்தைகள், பெண்கள் மீது தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பட்டியலின மக்கள், இளைஞர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து பாடுபடுகிறது.
தமிழக அமைச்சர்கள் சனாதனம் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகின்றனர். நாம் மதிக்கின்ற சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்திப் பேசுகின்றனர். ஆளும் திமுக தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அவர்களை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் இது.
காசி தமிழ்ச் சங்கமம் மூலம் பல்வேறு இடங்களுக்கும் தமிழ் மொழி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து, அனைவருக்குமான அரசை தமிழகத்தில் அமைக்க சபதமேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி னிவாசன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.