சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான புகாரை கூட்டுறவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இருவாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ. வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகம் முழுவதும் உள்ள மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது டோக்கன் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையிட்டு விவசாயிகளிடம் லஞ்சம் பெறும் நிலை உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் அவர்களுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதால், சொந்தமாக நெல்லை விளைவிக்கும் விவசாயிகள் அதை அரசிடம் கொண்டு சேர்ப்பதற்குள் இடைத்தரகர்களிடம் சிக்கி மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறும் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உத்தரவிட வேண்டும்.
அத்துடன் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நேரடியாகவே பதிவு செய்து டோக்கன் பெறும் நடவடிக்கையை உருவாக்க உத்தரவிட வேண்டும். இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போதிய எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில். தங்களுக்கு இதுதொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் தரப்பு கோரிக்கையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு இதுதொடர்பாக இருவாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை செயலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.