புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன்
கோப்புப் படம்
மதுரை: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் ‘முதல்வருக்கு அரோகரோ’ என கோஷம் எழுப்பிய விவகாரத்தில் அறநிலைத் துறை அமைச்சர் மற்றும் பாடகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வழக்கறிஞர் அருண்குமார், மதுரை வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
‘திருச்செந்தூர் கோயிலில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல லட்சம் பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து விழாவில் பங்கேற்கின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்வின் போது பக்தர்கள் ஒரே நேரத்தில் முருகப் பெருமானைப் போற்றி ‘அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்புவர்.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில் பாடகர்கள் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி, முருகப் பெருமானை போற்றி அரோகரா என்ற கோஷத்துடன், தமிழக முதல்வருக்கும், அறநிலையத் துறை அமைச்சருக்கும் அரோகரா என்று கோஷம் எழுப்பியுள்ளனர்.
‘அரோகரா’ என்ற முழக்கம் முருகப் பெருமானின் மீதான பக்தியால் கடவுளை போற்றி எழுப்பப்படும் கோஷமாகும். இதை அரசியல் பதவிகளில் இருப்பவர்களை புகழ்ந்துரைப்பதற்காக வேண்டும் என்றே பயன்படுத்தப்படுவது இந்து மத நம்பிக்கையை சீர்குலைப்பதாகும்.
சூரசம்ஹார விழா மேடையை எந்தவொரு அரசியல் தலைவர் அல்லது பொதுப் பதவி வகிப்பவரின் அரசியல் விளம்பரத்துக்கோ, தனிப்பட்ட புகழுக்கோ அல்லது கட்சி சார்ந்த முன்னிலைப்படுத்தும் நிகழ்வுக்கான மேடையாக பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குறிப்பாக மேடையில் அரோகரோ கோஷம் எழுப்பியவர்கள் கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையால் அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டார்களா? நிகழ்ச்சி உரிய அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டதா? அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் ஏதேனும் அரசியல் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தா? இவர்களுக்கு கோயில் நிதியில் சன்மானம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
மத மேடைகள் மற்றும் கோயில் திருவிழாக்களை அரசியல் விளம்பரத்துக்குப் பயன்படுத்தி வருவது பக்தர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்த விட்டால் மற்ற கோயில் விழாக்களிலும் இதுபோன்று தொடர்ந்து நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
கோயில் வழிபாடு மற்றும் ஆன்மீகத்துக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும். பக்தர்களின் மத உணர்வுகளைக் கட்சி சார்ந்த அல்லது தனிப்பட்ட நபர்களின் புகழுக்காகப் பயன்படுத்த நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது.
எனவே, திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின் போது முதல்வர், அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா கோஷம் எழுப்பியது தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர், பாடகர்கள் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், மத சடங்குகளும் கோயில் திருவிழாக்களும் அரசியல் புகழுக்கான மேடைகளாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், இதுபோன்ற நிகழ்வுகளில் கோயில் நிர்வாகம் மத நோக்கத்தையும் பாரம்பரியத் தன்மையை பராமரிப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.