சென்னை: 40 கிலோ கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: 40 கிலோ கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
Updated on: 
1 min read

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 40 கிலோ கஞ்சா கடத்திய ஆட்டோ ஒட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது.

கடந்த 2023 மார்ச் 20 அன்று பட்டினப்பாக்கம் போலீஸார் சாந்தோம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஆட்டோ ஓட்டி வந்த சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (55) என்பவரை நிறுத்தி ஆட்டோவில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 40 கிலோ கஞ்சாவை ஆட்டோவில் சட்டவிரோதமாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து ஆட்டோ மற்றும் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பாக நடந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே. உதயக்குமார், ‘40 கிலோ கஞ்சாவை ஆட்டோவில் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் செல்வம் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு சாட்சிகள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளது’ என வாதிட்டார். பதிலுக்கு செல்வம் தரப்பில், தனக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், ‘போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதிலும், இளைய தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் அனைவருக்கும் கடமை உள்ளது’ எனக் கூறி, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் செல்வத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை: 40 கிலோ கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
ராஜஸ்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி - பாஜகவுக்கு பின்னடைவு

X