‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்து மகளிருக்கு பேருந்து டிக்கெட் வழங்கிய முதல்வர் விஜய்.
சென்னை: அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ‘விடியல் பயணத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரிலான இத்திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், “அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவதால் தனியார் பேருந்துகளுக்கு கடுமையான நிதி இழப்பு ஏற்படுகிறது. இதனால் பேருந்து தொழிலையே கைவிட வேண்டிய விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகிறோம். பெண் பயணிகளிடம் இருந்து மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரானது.
சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த அறிவிப்பின் அடிப்படையில் மட்டுமே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதே தவிர, இதற்கு முறையான அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.