மதுரை: திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன், டெல்லியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அமித் மளாவியா மீது திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் “தமிழக துணை முதல்வர் உதயநிதி, சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசும்போது, சிலவற்றை எதிர்க்க வேண்டும், சிலவற்றை ஒழிக்க வேண்டும். கொசு, டெங்கு, காரோனாவை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில் சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே சரியாகும் என்று பேசியிருந்தார்.
துணை முதல்வரின் இந்தப் பேச்சை டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி அமித் மளாவியா என்பவர் அவரது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, உதயநிதி சனாதானத்தை டெங்கு, மலேரியாவுடன் இணைத்துப் பேசி இனப் படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார்” என பதிவிட்டுள்ளார். மளாவியாவின் இப்பதிவு இரு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இப்புகாரின் பேரில் அமித் மளாவியா மீது திருச்சி போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி எஸ்.மதி விசாரித்தார். விசாரணைக்குப் பிறகு, அமித் மளாவியா மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.