சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் செய்வது மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கான தேர்தல் ஆணைய டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் செய்வதற்கும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 ஆயிரத்து 744 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வீடியோ பதிவு செய்வதற்கும் தேர்தல் ஆணையம் டெண்டர் கோரியது.
இந்த டெண்டரில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை மொத்த வணிக விற்பனையில் ஏற்கனவே ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கேமராக்களை பொருத்திய முன்அனுபவமும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 2 ஆயிரத்து 500 கேமராக்களை பொருத்திய முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்றும் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நிபந்தனைகளை எதிர்த்து, டெல்லியை சேர்ந்த இன்னோவேட்டிவ் இந்தியா லிமிடெட் மற்றும் சென்னையை சேர்ந்த ஐ-நெட் செக்யூர் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது , மனுதாரர்கள் நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன், சித்தார்த் மிருதுல், வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி, “இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ரூ. 100 கோடி வரை மொத்த விற்பனை வருவாய் பெற்றிருக்க வேண்டும் என தமிழகத்தில் மட்டுமே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது, வெப்-காஸ்டிங் செய்யும் நிறுவனங்களே வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அனுபவம் பெற்றவை என்பதால் தேர்தல் ஆணையத்தின் புதுவிதமான நிபந்தனைகள் தேவையற்றது.
எனவே, அந்த டெண்டரை ரத்து செய்து புதிதாக டெண்டர் கோர உத்தரவிட வேண்டும்” என வாதிட்டனர். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “தேர்தலில் வாக்குப்பதிவு என்பதும், வாக்கு எண்ணிக்கை என்பதும் இருவேறு நிலைகள்.
வெப்-காஸ்டிங் மற்றும் கண்காணிப்புக்கென தனித்தனியாக அனுபவம் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு அப்பணிகளை வழங்கினால் மட்டுமே தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தி மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.
இதுபோன்ற நிபந்தனைகள் வழக்கமானதுதான். தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், டெண்டர் இன்று (நேற்று) இறுதி செய்யப்படவுள்ளது. இந்த சூழலில் டெண்டரை ரத்து செய்ய முடியாது” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகளை மாற்றி அமைக்க முடியாது என்பதாலும், பாரபட்சமாக இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்காததாலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்ய முடியாது.
தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளால்தான் டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே. இந்த டெண்டரை ரத்து செய்ய முடியாது” எனக்கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.