புதுச்சேரி: சகோதரரை தாக்கியது தொடர்பான நிதியமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆக.21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அமைச்சர் மரியவில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும், அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், மரியவில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் வெள்ளியன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மரியவில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, குடும்ப பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்துக்கு வழக்கை அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் புதுச்சேரி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை ஆக. 18-க்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நீதித்துறை நடுவர் சேரலாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையத்தில் புதன்கிழமை (இன்று) வழக்கு விசாரணைக்கு வருவதால் மரிய வில்சனால் வர இயலவில்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து இவ்வழக்கு வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.