சென்னை: வீட்டுவசதி வாரிய வீட்டு மனையை முறைகேடாக பெற்றதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த போலீஸ் அதிகாரி கணேசன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டு வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 4,370 சதுரஅடி கொண்ட வீட்டு வசதி வாரிய வீட்டு மனையை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப் பாதுகாவலராக பணியாற்றிய போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கணேசன், அவரது மனைவி பத்மா மற்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரான ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை உத்தரவு பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கணேசன் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கணேஷ் குமாரும், போலீஸ் அதிகாரி கணேசன் தரப்பில் வழக்கறிஞர் கே.முத்து கணேச பாண்டியனும் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விதிகளுக்கு உட்பட்டே அனைத்து பரிமாற்றங்களும் நடந்துள்ளது எனக் கூறி, குற்றம்சாட்டப்பட்ட கணேசன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.