சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட வழித்தடத்தில் போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதற்காக, திட்ட மேலாண்மை மற்றும் விரிவான வடிவமைப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் ரூ.35.97 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஏகாம் இந்தியா நிறுவன மண்டல இயக்குநர் சுனில் குமார் ரெட்டி காசா, நிப்பான் கோயி இந்தியா நிறுவன இணை இயக்குநர் சதீஷ்லால் சுனேஜா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் கே.மணி வெங்கட குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதல்கட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பயணிகள் சேவை எந்தவித தடங்கலும் இன்றி, மிகவும் பாதுகாப்பாக தொடர்வதை உறுதி செய்தவாறே இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டவழித்தடங்களை மேம்படுத்துவதற்கான கட்டிடக் கலை, ரயில் பாதைகள், மின்சார மற்றும் இயந்திரவியல் பணிகளுக்கான விரிவான திட்ட வரைபடங்களைத் தயாரித்தல், ஒப்பந்தப் புள்ளிகளை உருவாக்குதல் மற்றும் கட்டுமானப் பணிகளை நேரில் கண்காணித்து நிர்வகித்தல் போன்ற அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் மேற்பார்வைப் பணிகளையும் இந்த ஆலோசனை நிறுவனம் முழுமையாக மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.