சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியாகும் நிலையில், மு.க.ஸ்டாலின், பழனிசாமி, விஜய், சீமான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எடப்பாடியில் தவெக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு, வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஏப்ரல் 6-ம் தேதி நேற்று முன்தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்தனர்.
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி (இபிஎஸ்), சாத்தூரில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஸ்ரீபெரும்புதூரில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மயிலாப்பூரில் தமிழகப் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
சென்னையில் 628 உட்பட 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏராளமானோர் கூடுதல் மனுக்களைத் தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 மனுக்களையும், தவெக தலைவர் 3 மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று பகல் 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. இதில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பழனிசாமி, சீமான், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, சவுமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஆட்சேபனை: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுவில், சான்றொப்பம் காலாவதியான நோட்டரி வழக்கறிஞரிடம் இருந்து பெறப்பட்டதாக பாமகவினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்குரிய ஆவணங்களைச் சமர்பித்த பின்னர், விஜய்யின் மனு ஏற்கப்பட்டது.
அதேபோல், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யின் மனு ஏற்கப்பட்டது. வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா சொத்து விவரங்களை மறைத்ததாக சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டியதால், பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியில் அவரது மனுவும் ஏற்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு, நீண்ட நேரம் கழித்து ஏற்கப்பட்டது. அவருக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சென்னை ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சன் முறையாக மனுவை பூர்த்தி செய்யாததால் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு கடைசியில் ஏற்கப்பட்டது.
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமார் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா மனுத்தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரை அதே தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
ஆனால், அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்துள்ளனர். உரிய விதிமுறைகளைப் பின்பற்றாததால் அருண்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார். இதே காரணத்துக்காக, மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்பு மனுவில் எழுத்துப் பிழை மற்றும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. அதனால், மாற்று வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டது.
பரிசீலனை முடிவில் சென்னையில் 462 உட்பட 234 தொகுதிகளிலும் 4,738 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கால அவகாசம் உள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.
விஜய் பெயரில் 4 பேர்: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், விஜய்யின் மனு உட்பட 48 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பொதுவாகவே நட்சத்திர வேட்பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே மற்ற கட்சிகள் அதிகமான சுயேச்சை வேட்பாளர்களை வேட்பு மனுத் தாக்கல் செய்ய வைப்பது வாடிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், அவரது முழுப்பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. அந்த மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.