திமுக வேட்பாளர் த.வேலுவுக்கு மலர்தூவி வரவேற்பு அளித்த பெண்கள்.

 

படங்கள்: எல்.சீனிவாசன்

தமிழகம்

மயிலாப்பூர் தொகுதியில் வெற்றிக்கனியை பறிக்க மல்லுகட்டும் வேட்பாளர்கள்!

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய ஆன்மிகத் தலங்கள் நிரம்பிய மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார் என அரசியல் கட்சியினர் மல்லு கட்டுகின்றனர்.

திமுக வேட்பாளராக த.வேலு, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.எல்.அருண், தவெக சார்பில் அக்கட்சியின் பொருளாளரான வெங்கட ரமணன் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் திமுக, பாஜக, நாதக தவெக என 4 முனை போட்டியே நிலவுகிறது.

          

திமுக - செய்ததை சொல்லி வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளரான த.வேலு, வாகனங்களில் சென்ற வாறும், நடைபயணமாகவும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த பணிகளைப் பட்டியலிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்.

பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்த தமிழிசை சவுந்தரராஜன்

குறிப்பாக, கோயில் திருப்பணிகள், பள்ளி கட்டிடங்கள் புனரமைப்பு, மழைநீர் வடிகால் பணிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

வெற்றி பெற்றால், மயிலாப்பூரை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை, பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

அதிமுக - மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை

பாஜக வேட்பாளரான தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சாமானியர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்துவருகிறார்.

நாதக - ஊழல் இல்லா திட்டங்கள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.எல்.அருண், ‘‘தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான தேவை வந்து விட்டது.

தொண்டர்கள் புடைசூழ வீதிகளில் சென்று வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் ஆர்.எல்.அருண்

தொகுதி வளர்ச்சி அடையவும், மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி அடையவும், திட்டங்கள் 100 சதவீதம் தொகுதி மக்களை ஊழல் இல்லாமல் சென்றடையவும் பாடுபடுவேன்’’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

இளைஞர்கள் அணிவகுத்து பின்தொடர, வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் வெங்கடரமணன்

தவெக - ஆக்கப்பூர்வமான மாற்றம்

தவெக வேட்பாளர் வெங்கடரமணன், ‘ஆக்கப்பூர்வமான மாற்றம் வேண்டும். அதை என்னால் தொகுதி மக்களுக்கு கொடுக்க முடியும்.

தொகுதியிலேயே இருந்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்’ என கூறி வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். வாக்குப்பதிவுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் மயிலாப்பூர் தொகுதியில் பிரச்சாரம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT