எஸ்.பி.வேலுமணி

 
தமிழகம்

வேட்பாளர் வரலாறு: தொண்டாமுத்தூரில் 4-வது முறையாக களமிறங்கும் எஸ்.பி.வேலுமணி

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தொடர்ந்து 4-வது முறையாக இத்தொகுதியில் களமிறங்குகிறார்.

அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-11 காலகட்டத்தில் பேரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி, கடந்த 2011-ல் தொண்டாமுத்தூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். 2016-ல் இரண்டாவது முறையாகவும், 2021-ல் 3-வது முறையாகவும் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், நடப்புத் தேர்தலில் 4-வது முறையாக போட்டியிடுகிறார்.

          

குனியமுத்தூர் சுகுணாபுரத்தைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, இளமைக்காலம் முதலே அதிமுகவில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறார். 2001-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு குனியமுத்தூர் நகராட்சி தலைவர் ஆனார்.

2006-ம் ஆண்டு முதல்முறையாக பேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 14,235 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த காலகட்டத்தில் திமுக ஆளும் கட்சியாக இருந்ததால், திமுக அரசுக்கு எதிராக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த அத்தனை போராட்டங்களையும் முன்னின்று எஸ்.பி.வேலுமணி நடத்தினார்.

பின்னர், 2011, 2016 தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எஸ்.பி.வேலுமணி அமைச்சராக பணியாற்றியுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, தொழில்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

அதிமுகவில் தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாத தலைவராக உள்ள எஸ்.பி.வேலுமணி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக வும் உள்ளார்.எஸ்.பி.வேலுமணி

SCROLL FOR NEXT