தமிழகம்

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

வெற்றி மயிலோன்

சென்னை: “முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக நிதி நிலைமை, பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அமைச்சர்களின் துறை ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டதுடன், அடுத்தடுத்து நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் பட்ஜெட் தொடர்பான கூட்டம். அதுகுறித்து வெளியில் விவாதிக்க முடியாது. இது பட்ஜெட் சம்மந்தப்பட்ட கூட்டம். பட்ஜெட்டை எப்படி தாக்கல் செய்வது, நிதி நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.” என்றார்.

மேலும், நாகர்கோவில் விசாரணைக் கைதி மரணம் குறித்து 2 நாட்களுக்கு முன்பே வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.

தேங்கிக் கிடந்த லாக்-அப் மரண வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. எந்த இடத்திலும், யாரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லை. சிறையிலோ, காவல் நிலையத்திலோ மரணம் நடந்தால், இந்த அரசு பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் நிற்கும் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

SCROLL FOR NEXT