சென்னை: ‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல, தனது பதவிக்கு ஆபத்து வந்தவுடன், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் என பழனிசாமி சொல்கிறார்” என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைகூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பழனிசாமி, அதிமுகவை ஒருங்கிணைக்க மறுத்ததாலும், வலிமையான கூட்டணியை அமைக்காத காரணத்தாலும் தோற்றோம்.
அப்போதே தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றோம். தவெக சார்பாகவும் கூட்டணி அமைக்க பேசினார்கள். ஆனால் கூட்டணி பேச வந்தவர்களை பழனிசாமி உதாசீனப்படுத்தினார். தேமுதிக,கிருஷ்ணசாமி உள்ளிட்ட யாரையும் அரவணைக்கவில்லை.
ஓபிஎஸ் தனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம், அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன் என்று கூறியும் அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தார். இப்போது பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘தவறு செய்தவர்கள் திருந்திவந்தால் ஏற்றுக் கொள்வோம்’ என சொல்கிறார்.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல, தனது பதவிக்கு ஆபத்து வந்தவுடன் இதுபோல பேசுகிறார். நாங்கள் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டதுபோல அறிக்கை வெளியிடுகிறார்.
ஒருபக்கம் பேசித் தீர்க்கலாம் என சொல்லிவிட்டு, மறுபுறம் 31 மாவட்டச் செயலாளர்களை பழனிசாமி நீக்குகிறார். பொதுக்குழுவை கூட்ட கையெழுத்துப் போட்டால் உங்கள் பதவி பறிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கிறார்.
பன்னீர்செல்வம் - பழனிசாமி தொடர்பான வழக்கில், ஜெயலலிதா இருந்தபோது பொறுப்புகளில் இருந்தவர்களுக்கே கையெழுத்து போடும் அதிகாரம் என தீர்ப்பு வந்தது.
அதேபோல, அதிமுகவில் எங்களுக்கும், பழனிசாமி தரப்புக்கும் மோதல் ஏற்பட்ட மே 11-க்கு முன்பு யாரெல்லாம் பொறுப்பில் இருந்தார்களோ, அவர்களே பதவியில் நீடிப்பார்கள்.
அதிமுக சட்டவிதிகளின்படி 5-ல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று பொதுச்செயலாளரிடம் கொடுத்தால், பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்டவேண்டும் என உள்ளது. பொதுக்குழுவை கூட்டி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் எதை ஏற்றுக் கொள்கிறார்களோ அதையே நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை வலிமையான இயக்கமாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.