

| படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டதால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவுக்குள் கலகம் ஏற்பட்டு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமிக்கு எதிராக தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தில் பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
அதைத்தொடர்ந்து கட்சி முடிவுக்கு எதிராகச் செயல்பட்ட நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைபறித்து, அந்த இடங்களில் தனது ஆதரவாளர்களை பழனிசாமி நியமித்தார்.
அதேநேரம், பழனிசாமியின் நடவடிக்கைகள் செல்லாது என அறிவித்த சண்முகம் தரப்பு, பொதுக்குழு கூட்டத்தைக்கூட்டி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவதாக நேற்று முன்தினம் பழனிசாமி அறிவித்தார்.
பின்னர் அந்தக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு மாற்றப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் காலை முதலே அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்பட்டனர். காலை 9 மணியளவில் அலுவலகத்துக்கு பழனிசாமி வந்தார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர்களும் ஒவ்வொருவராக வந்தனர்.
இதற்கிடையே எந்த நேரத்திலும் சி.வி.சண்முகம் தரப்பினர் வந்து பிரச்சினை செய்யக்கூடும் என்ற தகவல் பரவியது. இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள் ராஜேஷ், ஆதிராஜாராம், தி.நகர் சத்யா ஆகியோரின் ஆதரவாளர்கள் அதிக அளவில் அங்கு திரண்டனர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவருடனும் பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். தேர்தல் தோல்விக்கான காரணங்கள் என்ன, அதை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது குறித்து கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர்களிடம், “பதவிக்காக யாரும் தவறான பாதையில் செல்ல வேண்டாம். அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிபெறும் வகையில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
புதிய மாவட்டச் செயலாளர்கள் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். உங்களுக்கு எந்த நெருக்கடி வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என பேசியதாகக் கூறப்படுகிறது.
பழனிசாமியின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனும் பங்கேற்றது சண்முகம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ரமணா, “அதிமுகவின் 87 மாவட்டச் செயலாளர்களில் 80-க்கும் மேற்பட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றுமை குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை” என்றார். ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும்.
அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என பொதுச்செயலாளர் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர்” என்றார்.
மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் முழு அர்ப்பணிப்புடன் ஒன்றுபட்டு செயல்பட அதிமுக உறுதி எடுத்துள்ளது. அவரின் கரங்களை வலுப்படுத்த எங்கள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
கூட்டத்தை புறக்கணித்த டி.ஜெயக்குமார்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் வடசென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெயக்குமார். தேர்தல் தோல்விக்குப் பிறகு ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
சி.வி.சண்முகம் தரப்பு நடத்தி வரும் கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இப்படியான சூழலில் பழனிசாமி நேற்று கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் ஜெயக்குமார் பங்கேற்காதது அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.