படங்கள்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி: “தமிழகத்தில் தேசிய உணர்வு ஒருபோதும் மறையாது. தேசிய உணர்வுதான் தமிழ் மொழியை, தமிழகத்தை பாதுகாக்கும். தமிழ் மண்ணில் மீண்டும் தேசிய உணர்வை மாணவர்கள் வலுப்படுத்த வேண்டும்” என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று (நவ.11) நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது: “நான் இன்று இந்திய குடியரசு துணைத் தலைவர் நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு இந்தக் கல்லூரியில் நான் பயின்ற படிப்பும், இங்கே நான் கண்ட ஆளுமைகளும்தான் காரணம்.
குடியரசு துணைத் தலைவராக வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கின்ற மனவலிமையையும், அவர்களோடு உரையாடுகின்ற மனவலிமையையும் தந்தது இந்தக் கல்லூரியில் கற்ற கல்வியும், இங்கே கண்ட ஆளுமைகளும்தான்.
நாடாளுமன்றத்தை நடத்துவது என்பது ஒரு கல்லூரியை நடத்துவதை விட மிக கடினமான ஒன்றாகும். அதனை திறம்பட நடத்தும் திறனும் இங்கே இருந்துதான் எனக்கு கிடைத்தது. எந்த மனிதன் தன்னுடைய வேர்களை மறக்காமல் இருக்கிறானோ, அவனால்தான் மிக ச்சிறந்த உயரத்துக்கு செல்ல முடியும்.
வ.உ.சி. போன்ற எத்தனையோ தியாகிகளின் தியாகங்கள், சொல்லொண்ணாத வேதனைகள், தாங்கிக்கொள்ள முடியாத துயரங்களை கடந்துதான் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அந்தத் தேசிய உணர்வுதான் இன்றைக்கு நமக்கு ஒரு மகத்தான தேசத்தைத் தந்திருக்கிறது.
தமிழகத்தின் தேசிய உணர்வு ஏதோ காலத்தின் போக்கில் பலர் நினைப்பதை போல அழிந்துவிடவில்லை. மகத்தான தியாகிகளான சுப்பிரமணிய சிவா, வ.உ. சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் வளர்த்த தேசிய உணர்வு இந்த மண்ணை விட்டு ஒரு போதும் மாறாது, மறையாது என்பதுதான் என்னுடைய ஆழமான நம்பிக்கை.
இந்த பாரத தேசம் ஒருங்கிணைந்த தேசமாக இருப்பதால்தான் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. பெரிய பொருளாதார வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த தேசம் ஒருமைப்பட்ட தேசமாக, மகத்தான தேசமாக இருக்கிறபோதுதான் நம்முடைய தமிழின் பெருமையும் பாதுகாக்கப்படும்.
இந்த தேசம் ஒரே தேசபக்தி உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறது. அதிலிருந்து தமிழகம் விதிவிலக்காக மாறிவிடக்கூடாது. மாணவர்கள், தேசிய உணர்வைத் தமிழ் மண்ணில் மீண்டும் வலுப்படுத்த வேண்டும். தேசிய உணர்வுதான் நமது தமிழைப் பாதுகாக்க முடியும். தேசிய உணர்வுதான் தமிழகத்தின் பெருமையைக் காத்து நிற்க முடியும். எந்தச் சூழ்நிலையிலும், யாரிடத்திலும் இழிவுக்கு ஆளாகாத ஒரு தமிழகத்தை உருவாக்கிக் காட்டவும் தேசிய உணர்வுதான் துணை நிற்கும்.
இந்தியா என்பது நமக்குப் பெரிய சந்தை மட்டுமல்ல; வலுவான, ஒருங்கிணைந்த தேசமாகவும் திகழ்கிறது. இந்த தேசம் வலுவாகவும் பெரியதாகவும் இருப்பதால்தான், இங்கே வாழ்கின்ற அத்தனை மக்களின் கலாச்சாரங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழான நிலையிலிருந்து மீட்டெடுத்துள்ளார். இது உலக வரலாற்றிலும், மனித இனத்தின் வரலாற்றிலும் ஒரு மகத்தான சாதனை.
முதலில் உற்பத்தி பெருக வேண்டும். அப்போது தான் வறுமை ஒழியும். உற்பத்தி பெருகும்போதுதான் ஒரு நாட்டின் செல்வ வளம் உயரும். செல்வ வளம் உயர்ந்தால் மட்டுமே, அந்தச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.
இதற்கு மாறாக, ஏற்கெனவே இருக்கின்ற செல்வத்தை மட்டுமே பங்கிட்டுக் கொண்டிருந்தால், காலப்போக்கில் நாம் வறுமையை மட்டும் தான் பங்கிட்டுக்கொள்ள முடியும். கம்யூனிஸ்ட்களின் கொள்கை இதுவாகதான் இருக்கிறது. அதனால்தான் உலகளவில் கம்யூனிசம் தோற்று போயுள்ளது.
சாதி, மதம் எதுவாக இருந்தாலும் அது மனிதர்களின் நலனைக் காப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இந்த மதம்தான் உயர்ந்தது, அந்த மதத்தைவிட இந்த மதம்தான் உயர்ந்தது என்று சொல்வது அறியாமையின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லா மதங்களும் மனிதர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. எல்லா இறைவனும் ஒன்று தான். ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கையின்படி வழிபடுவதற்கான உரிமை இருக்கிறது.
எந்தத் தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதை அவரவர் விருப்பத்துக்கும் உரிமைக்கும் விட்டுவிட வேண்டும். இன்றைய உலகில் அறிவியல் சார்ந்த முன்னேற்றமும், அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் கல்வியும் இல்லாமல், உலகமயமாக்கலின் போட்டியை நமது நாடு எதிர்கொண்டு வெற்றி பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை.
ஒவ்வொருவருக்கும் தாய்மொழியின் மீது மிகுந்த மரியாதையும் பிடிப்பும், சொல்ல முடியாத ஈர்ப்பும் இருப்பது இயற்கை. ஆனால், தாய்மொழி மீது வைத்திருக்கின்ற பாசத்திற்காக மற்றவர்களுடைய தாய்மொழிகளை இழிவுபடுத்திப் பேச வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
நமக்கு நம்முடைய தாய்மொழி எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தாய்மொழி முக்கியமானதுதான். பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலமாகத் தமிழன் உலகை ஆள முடியும் என்ற உயர்ந்த சிந்தனையை இந்த மாணவர்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு மொழிக்கும் எதிராக இருப்பதன் மூலம் நம்முடைய தாய்மொழியை வளர்த்துவிட முடியாது. நம்முடைய தாய்மொழியின் சிறப்பையும் செம்மையையும் உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், நமக்கும் பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் வாழ்க்கையைச் சீரழிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து நாம் கவனமாக விலகியிருக்க வேண்டும். குறிப்பாக, போதைப் பழக்கங்கள் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்துகளில் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இளம் வயதிலேயே தீய செயல்களையும், தீய பழக்கவழக்கங்களையும் தன்னை அண்டவிடாமல் தடுத்து நிறுத்துகின்ற வல்லமையைப் பெற்றிருக்கிறாவனால் மட்டும் தான் வாழ்க்கையில் மிகப் பெரிய உயரத்தைத் தொட முடியும். பெரிய சிகரங்களை எட்ட முடியும்.
இந்தியா உலகின் வல்லரசாக உருவாவதை உலகின் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர்வோம். 2047-ம் ஆண்டில் ஒரு உன்னதமான பாரத தேசத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் நம்முடைய முழுமையான, உள்ளப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், துணைச் செயலாளர் ஏ.பி.சி.வி.சண்முகம், முதல்வர் சொ.வீரபாகு, முன்னாள் மாணவர் பேரவை தலைவர் ஏ.வி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு குடியரசுத் துணைத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள நினைவு நுழைவு வாயில் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
பின்னர், தாம் பயின்ற பழைய வகுப்பறைக்குச் சென்று, தனது கல்லூரிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 1975- 1978 -ம் ஆண்டு தன்னுடன் பிபிஏ பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், தனது வகுப்புத் தோழர்களுடன் கலந்துரையாடி, பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். அனைவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.