பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏ.சி.சண்முகம் நினைவு பரிசு வழங்கினார். உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, முன்னாள் நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜோதிமணி, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்க வேந்தர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், நடிகர் கே.பாக்யராஜ், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் நேற்று மாலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே தலைமையில் நடைபெற்ற விழாவில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.சி.சண்முகம் வரவேற்புரை ஆற்றி, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாராட்டுரை வழங்கினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், டாக்டர் எம்ஜிஆர் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன், முன்னாள் நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஜோதிமணி, ஏசிஎஸ் கல்வி குழும தலைவர் ஏசிஎஸ் அருண்குமார், இதய அறுவை சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம், திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஒட்டுமொத்த சென்ட்ரல் ரயில் நிலையத்தையே எம்ஜிஆருக்கு தந்த பிறகும், எம்ஜிஆருக்கு சிலை வைக்க இடம் வேண்டும் என ஏ.சி.சண்முகம் கேட்கிறார். நிச்சயமாக அதை ரயில்வே அமைச்சரிடம் எடுத்துரைப்பேன். இன்றைக்கு பிரதமர் மோடி எங்கே சென்றாலும் தமிழின் பெருமையை, தமிழனின் பெருமையை உயர்த்திப் பேசுகிறார்.
மகாத்மா காந்தியிடம் அடுத்த பிறவியில் எங்கே பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதுக்கு, ‘நான் தமிழகத்தில் பிறக்க விரும்புகிறேன்.” என்று சொன்னார். அதேபோல் தான் பிரதமர் மோடியும் “எனக்கு தமிழ் தெரியவில்லை. மீண்டும் எனக்கு ஒரு பிறப்பு இருக்கும் என்று சொன்னால், தமிழ் மண்ணிலே தமிழனாக பிறக்க வேண்டும்” என்றார்.
இந்திய கலாச்சாரத்துக்கு அடித்தளமாக ஒரு கலாச்சாரம் இருக்கிறது என்றால் அது தமிழகத்தின் கலாச்சாரம்தான். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அதுதான் அடித்தளம். உலகம் ஒன்றுதான் என்று முதன்முதலாக சொன்னவர் கார்ல் மார்க்ஸ் என கருதிவிடாதீர்கள். அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தமிழ் புலவர் சொல்லியிருக்கிறார்.
புதிய நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோலை நிறுவி, தமிழர்களின் பெருமையை உலகறிய செய்தார் பிரதமர் மோடி. இன்று உலகம் முழுவதும் பாரதத்தை உற்று நோக்குகிறது என்றால், இத்தனை மொழிகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையாக ஒரு நாடு இருக்க முடியும் என்பதை உணர்ந்த காரணத்தால்தான்.
வடக்கே தோன்றிய சமணம் தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது வரலாறு. தமிழ் மொழி பேசுகின்ற 40 ஆயிரம் சமணர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியை பேசினாலும் பாரத தேசம் என்று வரும்போது ஒற்றுமையுடன் நிற்கிறோம்.
பாரத தேசம் வலிமை அடைய வேண்டும் என்பது ஏதோ, உலகத்தில் இருக்கிற நாடுகளை எல்லாம் அச்சுறுத்துவதற்காக அல்ல. இனி ஒருமுறை உலகத்தில் எந்த நாடும் பாரத தேசத்தை அச்சுறுத்துவதற்கு கனவிலும் நினைக்கக்கூடாது என்பதற்குத்தான். பிரதமர் மோடியின் தலைமையில் பொருளாதாரத்தில் 5-வது இடத்தை தொட்டோம், இன்றைக்கு 4-வது இடத்தில் இருக்கிறோம்.
விரைவில் 3-வது இடத்தை தொடப்போகிறோம். 2047-ல் நாம் நிச்சயமாக உலகத்தின் முதல் இடத்தை தொட்டே தீருவோம். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவை தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருந்து அளித்தார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.