உயிரிழந்த தேனி எஸ்எஸ்ஐ செந்தில்குமார்.

 
தமிழகம்

தேனி எஸ்எஸ்ஐ செந்தில்குமாரின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

தேனி: தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் (57) நேற்று (நவ.8) இரவு, தனது பணியில் இருந்தார்.

அப்போது சமதர்மபுரம் பகுதியில் சில நபர்கள் சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அவர்களை கண்டித்த போது, அவர்கள் உதவி ஆய்வாளரைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்பு மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

செந்தில்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார். நேற்று தீபாவளி தினத்தில் பணி முடித்துவிட்டு இரவு 10.30 மணிக்கு அல்லிநகரம் காந்திநகரில் உள்ள உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சமதர்மபுரம் மெயின் பஜாரில் மது போதையில் சில இளைஞர்கள் நடுரோட்டில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தொடர்ந்து வெடித்து, அதனை ரீல்ஸ்களாக எடுத்து கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.

தொந்தரவு செய்யும் வகையில் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அப்போது அங்கு வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களை கண்டித்தார். ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்து நடுரோட்டில் வைத்து பட்டாசுகளை வெடிக்கிறீர்கள்? அரசு நிர்ணயித்த நேரம் முடிந்துவிட்டது, கூச்சல் குழப்பம் செய்யாமல் இங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்ததுடன் மீண்டும் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டினர். இதனை தொடர்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தனது செல்போனில் அங்கு நடந்த நிகழ்வை வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அனைவரும் சூழ்ந்து நின்று அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் செந்தில்குமார் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரைக் கைது செய்து தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT