

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை: “தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 9 படுகொலைகள் நடந்துள்ளன. அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளையை பார்க்கும் போது அசுரர்கள் இன்னும் வாழ்வதாகவும், அவர்களை அழிக்கவேண்டிய இந்த அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இளைஞர் ஒருவரும், கல்லல் அருகே ரவுடியும் ஓட ஓட விரட்டிப் படுகொலை, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் கட்டி வைத்து கொலை, கடலூர் மாவட்டம் காட்டுப்பாளையம் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை, சென்னை வியாசர்பாடியில் 18 வயது இளைஞர் கொடூர கொலை, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை. இவ்வாறாக நேற்றைய தீபாவளி திருநாள் கொலைச் சம்பவங்களின் சங்கமமாக உருவெடுத்திருக்கிறது.
அதிலும், தேனி மாவட்டம் சமதர்மபுரத்தில் சாலையில் வாகனங்களை வழிமறித்து பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில் அவர்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதும், கடலூர் அருகே கொலை குற்றவாளியை பிடிக்க சென்ற காவல்துறையினர் மீது நடைபெற்றிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதலும் கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் காவல்துறையினர் மீதே தொடரும் தாக்குதல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி மாவட்டங்கள் வரை படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் அளவிற்கு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதலமைச்சரையும், தீபாவளி சிறப்பு தின நிகழ்வுகளில் விருந்தினர்களாக பங்கேற்று கொண்டாடி மகிழும் அமைச்சர்களையும் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.”
மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய அசுரர்களை, திருமால் அழித்து நன்மை அளித்த இத்திருநாளை கொண்டாடவேண்டிய மக்கள், தினம்தோறும் நடைபெறும் கொலை கொள்ளையை பார்க்கும் போது அசுரர்கள் இன்னும் வாழ்வதாகவும், அவர்களை அழிக்கவேண்டிய இந்த அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி என்பதை இனியாவது உணர்ந்து, அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.