தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: தவெக, திமுக, அதிமுக தீவிர வாக்கு சேகரிப்பு

வாக்குப் பதிவை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று முடிவடைகிறது. ஆளும் தவெக மற்றும் திமுக, அதிமுக கட்சியினர் கடைசிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தனித் தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் அக்​டோபர் 6-ம் தேதி நடை​பெறுகிறது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த செப்​டம்பர் 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி முடிவடைந்​தது. மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் (தவெக), பரந்​தாமன் (திமுக), கணிதா சம்​பத் (அதி​முக), சுகந்​தி (மார்க்​சிஸ்ட்), ஜானகி​ராமன் (நாம் தமிழர்) மற்​றும் சுயேச்சை​கள் என மொத்​தம் 28 பேர் களத்​தில் உள்​ளனர்.

அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா (தவெக), சுகன்​யா (திமுக), பானு​ம​தி (அதி​முக), லட்​சுமணன் (இந்​திய கம்​யூனிஸ்ட்), கார்த்​திகா (நாதக) உள்​ளிட்​டோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் விஜய் செப்​டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2-ம் தேதி, மது​ராந்​தகம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்​தார். செப்​டம்பர் 30-ம் தேதி தாராபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்த முதல்​வர், மீண்​டும் இன்று அங்கு பிரச்​சா​ரத்​துக்குச் செல்​கிறார்.

திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அந்தக் கட்​சித் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி உள்​ளிட்​டோரும், அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பிரச்​சா​ரம் செய்​தனர். கம்​யூனிஸ்ட் வேட்​பாளர்​களுக்கு வாக்கு கேட்டு அக்​கட்​சிகளின் மாநில நிர்​வாகி​களும், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர்.

இந்நிலையில் இரு தொகு​தி​களி​லும் இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இறு​தி​ கட்ட வாக்கு சேகரிப்​பில் வேட்​பாளர்​களும், கட்சி நிர்​வாகி​களும் தீவிரம் காட்டி வரு​கின்​றனர். பிரச்சாரத்துக்கு இன்று கடைசி நாள் என்பதால், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக முதல்வர் விஜய் இன்று தாராபுரம் வருகிறார். இதற்காகக் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வரும் முதல்வர் விஜய், பிரம்மாண்ட ‘ரோட் ஷோ’ மூலம் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

தொடர்ந்து அக்டோபர் ​6-ம் தேதி வாக்​குப்​ப​தி​வும், 9-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யும் நடை​பெறுகிறது. வாக்​குப்​ ப​திவையொட்​டி தொகு​தி முழு​வதும்​ பலத்​த பாது​காப்​பு ஏற்​பாடுகள்​ செய்​யப்​பட்​டுள்ளன. அத்துடன் தொகுதிகளில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரவுள்ளன.

6-ம் தேதி வாக்குப்பதிவு: இதுதொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதையடுத்து இன்று (அக்.4) மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதன்படி தேர்தல் பொதுக் கூட்டம், ஊர்வலம் நடத்த அல்லது அவற்றில் பங்கேற்க கூடாது.

இதுதவிர தேர்தல் பிரச்சாரம் தொடர்பான எந்தத் தகவலையும் திரைப்படம், டிவி, எப்எம் ரேடியோ, வாட்ஸ் ஆப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட எந்த ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடக் கூடாது. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு பொழுது ப் போக்கு நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது. இதை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதோர் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். மேலும், கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதும் கண்டறியப்படும்.

வாக்குப் பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளரின் சொந்த பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் பணியாளர்கள் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம் என்றபடி அனுமதி வழங்கப்படும்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ அனுமதி கிடையாது. தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதை தடுக்க தேர் தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT