

சிங்கீதம் சீனிவாச ராவ்
சென்னை: இந்தியத் திரையுலகின் முன்னோடி இயக்குநரான சிங்கீதம் சீனிவாச ராவ் சனிக்கிழமை (அக். 3) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், இந்திய சினிமாவில் புதுமையான, சோதனை முயற்சிகளுக்குப் பெயர் பெற்றவர். புகழ்பெற்ற கே.வி.ரெட்டியின் ‘மாயாபஜார்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அவர், பிற்காலத்தில் இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார்.
கமல்ஹாசனுடன் இணைந்து இவர் உருவாக்கிய திரைப்படங்கள் இந்திய திரையுலகின் மைல்கற்களாக அமைந்தன. குறிப்பாக, வசனங்களே இல்லாமல் முழுக்க முழுக்க பின்னணி இசையை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட 'பேசும் படம்' பெரும் பாராட்டைப் பெற்றது.
தொடர்ந்து 'அபூர்வ சகோதரர்கள்' (1989) படத்தில் 'அப்பு' என்ற பாத்திரத்தில் கமலை வித்தியாசமாக படம்பிடித்துத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தினார். மேலும் 'மைக்கேல் மதன காமராஜன்' (1990) படத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு சாதனை படைத்தார். இவை தவிர தெலுங்கில் முதல் டைம் டிராவல் திரைப்படமான 'ஆதித்யா 369' மற்றும் 'மயூரி' உள்ளிட்ட பல முக்கிய படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் கர்நாடக மாநில விருதுகள் பலவற்றை வென்றுள்ள இவருக்கு, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது. 90 வயதைக் கடந்த நிலையிலும் சினிமா மீதான காதலைக் கைவிடாத சிங்கீதம் சீனிவாச ராவ், அண்மையில் 'சிங் கீதம்'என்ற தனது 61-வது திரைப்படத்தை இயக்கி வியக்க வைத்தார். இவரது மறைவுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.