சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (அக்.4) மாலை 6 மணியுடன் முடிவடை கிறது. வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் அடுத்தடுத்து தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் தவெக-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிட்டது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக எஞ்சியுள்ள 5 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்.9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி முடிவடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மற்றும் சுயேட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய் செப்.25-ம் தேதியும் நேற்றும் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். செப்.30-ம் தேதி தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர், மீண்டும் நாளை அங்கு பிரச்சாரத்துக்கு செல்கிறார்.
திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோரும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியும், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சிகளின் மாநில நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்தனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
தவெக. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்களும் கட்சி நிர்வாகிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அக்.6-ம் தேதி வாக்குப்பதிவும், 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வாக்குப்பதிவையொட்டி தொகுதிமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.