புதுச்சேரி: புதுச்சேரியில் விஜய் ‘ரோடு’ ஷோ நடத்த அனுமதி கேட்ட விவகாரம் தொடர்பாக டிஜிபியை சந்திக்க வந்து வெகுநேரம் காத்திருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றத்துடன் புறப்பட்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதனிடையே, கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் நடைபெற இருந்த மக்கள் சந்திப்பு பயணமும் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பயணம் நடத்த கடந்த அக். 11-ம் தேதி தவெக நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தும், காவல் துறை தலைமையகத்திலும் அனுமதி கேட்டனர். காவல்துறை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதைத் தொடர்ந்து, வரும் டிச.5-ம் தேதி புதுச்சேரியில் விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கேட்டு, தவெக நிர்வாகி புதியவன் தலைமையில் அக்கட்சியினர் புதுச்சேரி டிஜிபியிடம் கடந்த நவ.26 அன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் காலாப்பட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்குகிறார். அதன்பின் அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க் (சோனாம்பாளையம் சந்திப்பு), மரப்பாலம் சந்திப்பு, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இதில் உப்பளம் சோனாம்பாளையம் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் ‘ரோடு ஷோ’ நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் பரிந்துரைகளை வழங்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேரிக்கும் பொருந்தும் என்பதால் புதுச்சேரி அரசும் ‘ரோடு ஷோ’ தொடர்பான முடிவுக்கு நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரிக்கு இன்று வந்தார். அவர் தவெக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு தொடர்பாக காவல் துறை தலைமையகத்தில் டிஜிபி ஷாலினி சிங்கை சந்திக்கக் காத்திருந்தார். அவர் முன் அனுமதி எதுவும் பெறாமல் வந்ததால், புதுச்சேரியில் டிஜிபி இல்லை என்ற தகவலும் தெரியாமல் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் டிஜிபி புதுச்சேரியில் இல்லை என்றும், டெல்லி சென்றிருப்பதாகவும் அவருக்கு பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அனுமதிக்காக காத்திருந்த புஸ்ஸி ஆனந்த் டிஜிபி அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். அவர் வெளியே வந்தபோது செய்தியாளர்கள், ‘அனுமதி கிடைத்ததா?’ என கேள்வி எழுப்பினர். அவர் அதற்கு பதில் தராமல், அங்கிருந்து காரில் ஏறிச் சென்றார்.