டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராக வந்த தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார்.

 
தமிழகம்

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் ஆஜர்

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 9 மணி நேரம் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து, கரூரில் ஆய்வு செய்து தகவல்களை திரட்டியது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக நிர்வாகிகளிடமும் நவ.24, 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது.

சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச. 2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தவெக மாநில நிர்வாகிகளிடமும் சிபிஐ விசாரித்தது. இதற்கிடையே, உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

மேலும், அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேற்று ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதிய

ழகன் மற்றும் ஆட்சியர், எஸ்.பி.உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விஜய் பிரச்சாரக் கூட்டத்துக்கு செய்திருந்த ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர்.

அதை படித்துப் பார்த்த அதிகாரிகள், ‘‘எத்தனை பேர் வருவதாக கூறி அனுமதி பெற்றீர்கள், எத்தனை பேர் வந்தனர், நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக பேரை திரட்டினீர்களா அல்லது அவர்களாகவே வந்தனரா, நெரிசல் ஏற்பட்ட உடனே மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினீர்களா?’’ என்பது உட்பட 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளித்தவர்கள் ஒருசில கேள்விகளுக்கு சிறிது நேரம் அவகாசம் எடுத்து பதில் அளித்துள்ளனர். அனைத்தையும் எழுத்து மூலமாக பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

ஆட்சியர், எஸ்.பி.யும் ஆஜர்கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி.ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். அவர்களிடமும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 9 மணி நேரம் நீடித்து,இரவு 7.30 மணி அளவில் முடிந்தது. விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் இன்றும் ஆஜராக உள்ளனர்.

விஜய்யிடம் விசாரிக்க திட்டம்: தேவைப்பட்டால் விஜய் உட்பட மேலும் சிலரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிந்து இரவு வெளியே வந்த நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘சம்மன் பேரில், தவெகவை சேர்ந்த 4 பேரும் ஆஜரானோம். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளோம். கரூரில் என்ன நடந்தது என்பது உலகத்துக்கே தெரியும். சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான விளக்கத்தையும், முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT