சென்னை: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி சென்னையில் காலை, மாலை வேளைகளில் 41 பேருந்துகளின் பயண நடைகள் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேருந்து வசதி தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் சைதாப்பேட்டை எம்எல்ஏ அருள் பிரகாசம் கோரிக்கை விடுத்தார்.
அதன் அடிப்படையில், சைதாப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்களைக் கொண்டு கடந்த 10 நாட்களாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், அப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துகள் அடிப்படையில் ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டு, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அந்த வகையில், மாணவர்கள் வசிப்பிடத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து அந்த பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களை அழைத்துச் சென்றுவர ஏதுவாக, ஏற்கெனவே சென்னையில் உள்ள 25 பள்ளிகளுக்கு 25 பேருந்துகள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள் ஒன்றுக்கு 41 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.