தமிழகம்

புத்தக கொள்முதல் முறைகேடு: அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்க ஐகோர்ட் உத்தரவு 

கி.மகாராஜன்

மதுரை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதியவும், அகல்விளக்கு பதிப்பகம் வங்கிக் கணக்குகளை முடக்கவும், கடந்த இரு ஆண்டுகள் புத்தகக் கொள்முதலில் ஈடுப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கான அறிவிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும், பொதுமக்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட வேண்டும், அதன் பின்னரே புத்தகக் கொள்முதல் இறுதி செய்யப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த 2024ல் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. கோவை பெரியார் அறிவுலக நூலகம் மற்றும் திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய   நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் புத்தகங்கள் கொள்முதல் நடைபெற்றுள்ளது. எனவே இதற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “இந்த முறைகேடுகள் குறித்து அரசு விசாரித்து வருகிறது. நாளை புத்தகக் கொள்முதல் தொடர்பான முழு விபரங்களும் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்வதோடு, அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு  ஒத்திவைத்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT