சென்னை: ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் சட்டப்படி 8.33 சதவீதம் போனஸ் வழங்க வேண்டு மென்றும், பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டுமென்றும் சேவை நிறுவனத்துக்கு சென்னை தொழில் தகராறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்திலும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைப்பது, 2021- 22 மற்றும் 2022- 23 காலகட்டங்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்குவது, தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை தொழில் தகராறு தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த தொழில் தகராறு தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவில், "கடந்த 2021- 22ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 16 சதவீத ஊதிய உயர்வுக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அதே சமயம், 2022- 23ம் ஆண்டுக்கு விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொண்டு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
தீபாவளி போனஸைப் பணியாளர்களுக்கு விழாக்கால செலவாக வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரத்து 400-ஐ போனஸாக கருத முடியாது. அவர்களுக்கு சட்டப்படி 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட வேண்டும். இந்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் பாக்கியை ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வரும் தனியார் நிறுவனம் 2 மாதங்களில் வழங்க வேண்டும். அதேபோல ஆம்புலன்ஸ் பணியாளர்களின் 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.