

யூடியூபர் திருகாவுக்கரசு
சென்னை: அரசியல் ஆய்வாளர் என்ற முறையில் தரவுகளைச் சேகரிப்பதற்காகவே தவெக எம்எல்ஏ இளையராஜாவை சந்தித்தேன் என யூடியூபர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலைய நிலையத்தில் அவர் ஆஜராகி கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் நான் பேசியது உண்மைதான். ஓர் அரசியல் ஆய்வாளர் என்ற முறையில் தரவுகளைச் சேகரிப்பதற்காகவே அவரைத் தொடர்பு கொண் டேன். எனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளேன்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை 65-க்கும் மேற்பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளேன். தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய்யை சந்தித்து 1.5 மணி நேரம் ஆலோசனை நடத்தினேன்.
ஜான் ஆரோக்கியசாமி, சரண் ரெட்டி ஆகியோருடனும் தேர்தல் தொடர்பாக பேசினேன். இதற்கு நான் எந்தக் கட்டணமும் பெறவில்லை. மேகாலயா புராஜெக்ட் குறித்தோ, சிங்கப்பூர், பெங்களூருவில் இருந்து ஹவாலா பணம் பெற்றது குறித்தோ காவல்துறை கூறும் தகவல்கள் தவறானவை, அப்படி ஒரு புராஜெக்ட் பற்றி நான் பேசவே இல்லை என்றார்.