பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் உடல்களைக் கொண்டுசென்ற வாகனங்கள்.
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 25 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கக் கோரி நேற்று முன்தினம் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணத் தொகை தலா ரூ.5.50 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேற்று முன்தினம் இரவே வழங்கினார்.
அதைத் தொடர்ந்து 10 பேரின் உடல்களை உறவினர்கள் பெற்றுச்சென்றனர். மேலும், அடையாளம் காணப்படாமலிருந்த ஓர் உடல் நேற்று அடையாளம் காணப்பட்டது. அதன்படி உயிரிழந்தவர் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த முத்து (50) என்பது தெரியவந்தது.
நேற்று மீதமுள்ள 15 பேரின் குடும்பத்தினருக்கும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நிவாரணத் தொகையை வழங்கினார். எஞ்சிய 15 பேரின் உடல்களும் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
அதோடு இலவச அமரர் ஊர்தி மூலம் அனைத்து உடல்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.
ஆலை உரிமையாளர் சரண்
இதனிடையே 25 பேர் உயிரிழப்புக்குக் காரணமான பட்டாசு ஆலையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
இந்த வழக்கில் மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். வெடி விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், ஆலை உரிமையாளர் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த ஈஸ்வரி, அவரது கணவர் முத்துமாணிக்கம் ஆகியோர் தலை மறைவாகினர்.
முத்துமாணிக்கம்
அவர்களை வச்சக்காரப்பட்டி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், முத்துமாணிக்கம் விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று காலை சரணடைந்தார். அவரை மே 5-ம் தேதி வரை காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நிஷாந்தினி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நீதிமன்றக் காவலில் அவர் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் முத்துமாணிக்கம் தலைமறைவாக இருக்க உதவிய அவரது உறவினர்கள் முத்துராஜ், வைரமுத்து, வெற்றிவேல்முருகன் ஆகியோரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.