தமிழகம்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் சென்னை, கோவை வந்தன

விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​வியட்நாம் படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழகத்​தைச் சேர்ந்த 10 பேரின் உடல்​கள் விமானம் மூலம் சென்​னை, கோவை விமான நிலை​யங்​களுக்கு கொண்​டு​வரப்​பட்​டு, அரசு சார்​பில் சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

வியட்நாம் நாட்​டுக்கு சுற்​றுலா சென்ற இந்​தி​யர்​கள், கடந்த 11-ம் தேதி கடலில் பயணம் செய்​த​போது படகு கவிழ்ந்​தது. இதில், தமிழகத்​தைச் சேர்ந்த 10 பேர், ஆந்​தி​ராவைச் சேர்ந்த 3 பேர், கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என 15 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர்.

அவர்​களின் உடல்​களை, இந்​தி​யா​வுக்கு கொண்டு வரு​வதற்​கான நடவடிக்​கைகளை வியட்​நாமில் உள்ள இந்​திய தூதரக அதி​காரி​கள் மேற்​கொண்​டனர். அதே​போல், தமிழகத்தை சேர்ந்த 10 பேர்​களின் உடல்​களை விரை​வாக, தமிழகம் கொண்டு வரு​வதற்​கான நடவடிக்​கைகளை எடுத்த முதல்​வர் விஜய், சேலம் டிஐஜி சந்​தோஷ் ஹடி​மானியை வியாட்​நாம் நாட்​டுக்கு அனுப்பி வைத்​தார்.

வியட்​நாம் நாட்​டில் இருந்து 15 பேரின் உடல்​கள் விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி மும்பை விமான நிலை​யத்​துக்கு கொண்​டு​வரப்​பட்​டு, நேற்று அதி​காலை தமிழகம், ஆந்​தி​ரா, கேரளா மாநில அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இதையடுத்​து, தமிழகத்​தைச் சேர்ந்த 10 பேரின் உடல்​கள் விமானங்​கள் மூலம் சென்னை மற்​றும் கோவை விமான நிலை​யங்​களுக்கு கொண்​டு​வரும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

அதன்​படி திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த ரவிசங்​கர், வேலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த விநயக்​கு​மார் (36), சென்னை அகரத்​தைச் சேர்ந்த சந்​தோஷ், திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடி பூண்​டியைச் சேர்ந்த பாபு ஆகியோரின் உடல்​கள் மும்​பை​யில் இருந்து சென்​னைக்கு நேற்று கொண்டு வரப்​பட்​டன.

சென்னை பழைய விமான நிலைய கார்கோ பகு​தி​யில் சட்ட நடை​முறை​கள் நிறைவு செய்த பிறகு, இறந்​தவர்​களின் உடல்​களுக்கு தமிழக அரசு சார்​பில் அதி​காரி​கள் அஞ்​சலி செலுத்​தினர்.

பின்​னர், உடல்​களை உறவினர்​களிடம் ஒப்​படைத்த அதி​காரி​கள், அரசு ஏற்​பாடு செய்​திருந்த வாக​னங்​களில் சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைத்தனர்.

அதே​போல், மேலும் 6 பேர்​களின் உடல்​களும் விமானம் மூலம் கோவை விமான நிலை​யம் கொண்டு செல்​லப்​பட்​டு, உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டு, சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. இறந்தவர்களின் உறவினர்​கள் கூறும்​போது, “எங்​களின் துயர​மான நேரத்​தில், மத்​திய, மாநில அரசுகள் தேவை​யான உதவி​களை செய்​துள்​ளன” என்​றனர்.

SCROLL FOR NEXT