கோப்புப் படம்
சென்னை: சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேர் புயலில் சிக்கி உயிரிழந்தனர். இதுதொடர்பாக படகு உரிமையாளர் டி.செல்வழகனை ராயபுரம் போலீஸார்கைது செய்தனர். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், மீனவர் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்க படகு உரிமையாளரை அறிவுறுத்தினார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 9 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் செல்வழகன் ஆஜராகினர். இறந்த மீனவர்களின் வாரிசுகளுடைய வயதுக்கேற்ப இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க மூத்த வழக்கறிஞர் சித்ரா நாராயணனை மத்தியஸ்தராக நீதிபதி நியமித்தார்.
இதற்கிடையே தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக படகு உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ. 50 ஆயிரத்தை கழித்துக் கொண்டு மீதமுள்ள ரூ.1.50 லட்சத்தை வழங்க படகு உரிமையாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அடுத்த விசாரணையை டிச.4-க்கு தள்ளிவைத்தார்.