அரசு பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட விசிகவினர்.
அரியலூர்: ஜெயங்கொண்டத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 260-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு இடையே சாதி ரீதியான கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதை மாணவர்களிடமும் ஆசிரியர்கள் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், தீபாவளி விடுமுறை முடிந்து கடந்த 10-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டபோது, ஆய்வக அறையில் உள்ள மேசையில் மனிதக்கழிவு வீசப்பட்டிருந்ததைக் கண்டு ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். அதன்பின், பள்ளித் தலைமையாசிரியர் முருகன், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமானவர்களையும், பள்ளி ஆய்வக அறையில் மேசையில் மனிதக்கழிவு வீசியவர்களையும் கைது செய்யக் கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் அக்கட்சியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்டச் செயலாளர் கதிர்வளவன் தலைமையில் விசிகவினர் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து முற்றுகையிட்டனர். அப்போது, சிலர் கைகளால் தாக்கியதில் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் முகப்பில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் புறக்கணிப்பு: இதனிடையே, பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமான அனைவரையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். ஆய்வக அறையில் மனிதக்கழிவு வீசிய நபர்களை கைதுசெய்ய வேண்டும். பள்ளிக்கு இரவு நேர காவலர் நியமிக்க வேண்டும். பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், 200 மாணவர்கள் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. அரசு பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட விசிகவினர்.