தமிழகம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பாய்லர் டியூப் வெடித்து 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பாய்லர் டியூப் வெடித்தன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒர் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் தினசரி 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், முதலாவது பிரிவில் முதல் அலகில் பாய்லர் டியூப் வெடித்தன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, முதல் பிரிவின் 3 அலகில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தில் 2 மற்றும் 4 ஆகிய 2 அலகில் சேர்த்து 380 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது பிரிவில் 380 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தமாக 760 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தற்போது 760 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT