

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டு இன்று பொருத்தப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து சரியாக உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து இந்தத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்பாக கடந்த செப்.12-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதையடுத்து மின்னணு இயந்திர மேலாண்மை மென்பொருள் மூலம் மின்னணு இயந்திரங்களை வாக்குச்சாவடி வாரிய ஒதுக்கீடு செய்யும் பணி கடந்த செப்.22-ம் தேதி நடந்தது.
பின்னர் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் பட்டியல் மற்றும் இருப்பு இயந்திரங்கள் பட்டியல் வேட்பாளர்கள் அனைவருக்கும் தரப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப் பதிவில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் விவரங்கள் மற்றும் சின்னம் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் இன்று பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தலுக்கு தயார்படுத்தும் பணி நடந்தது.
இந்தப் பணி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. இதில், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலர் குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இப்பணி முடிந்ததும், இங்குள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்பாக இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.