பி.எல்.சந்தோஷ்
பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கமலாலயத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் வலிமையான வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பாஜக மத்திய தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே, தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகத் தனது நிலைப்பாட்டை விளக்கி அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நெல்லை, நாகர்கோவில், மொடக்குறிச்சி மற்றும் கோவை தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள 27 இடங்களில், பாஜகவின் சிட்டிங் தொகுதிகளான கோவை தெற்கு மற்றும் நெல்லை ஆகிய தொகுதிகள் மீண்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதன் காரணமாக, சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் தங்களின் தொகுதிகளை மாற்றும் சூழல் உருவாகியுள்ளது. அதன்படி, நயினார் நாகேந்திரன் இந்த முறை சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர். இருப்பினும், கட்சியின் முக்கிய முகமான அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இதற்கிடையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “யார் வேட்பாளர் என்பதை கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசித்து முடிவு செய்யும். இறுதிப் பட்டியலை டெல்லி தலைமை வெளியிடும். அதேபோல், அடுத்த இரண்டு நாட்களில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகும்” என்றார்.